9 Aug 2015

உலகில் ஓர் ஓரறிவு

என்றாயினும் யானும் நல்லவர்களைக் கண்டுவிட
எந்நாளும் புரிகிறேன் ஒற்றைக்காலில் தவம்..
ஆயினும் எங்கும் மனிதர்களே தென்படுகின்றனர்..!

பிள்ளையைப் பெற்றெடுத்து விட்டு
பசியால் அது வாடுவதை மறந்து
ஆண்மகன் இவனென ஆணவங் கொள்கின்றான்..
மலடி இவளில்லையென மார்தட்டி கொள்கின்றாள்..

இயற்கையின் புணர்ச்சியினால்
கருப்பையில் விதைக்கப்பட்டு
உதரமகன்று தழைத்தோங்க வேண்டியவன்
சோதனைக் குழாய் குழந்தையாக
புதைக்கப்பட்டு வெளிவரச் செய்து
சோதனையையே எனக்கு பரிசாக்கி பரிகாசிக்கிறான்..

சுட்டெரிக்கும் வெயிலில்
எந்தேகம் வெந்து கருக
மயிரும் உலர்ந்து சருக
சண்டமாருதம் சுழன்று அடிக்கையில்
ஊன்றிய காலும் ஊனமாக
வாடி ஓய்ந்து வெறுத்து கிடக்கையில்
தேடி வந்த வான்மழையில்
தாகம் தணித்து உயிர்ப்பிக்கிறேன்..

ஊர்க் கண்களின் கணக்குக்காக
உலகம் உய்ய வந்த கன்று
சுயம்பாய் வளர்ந்து நிற்கையில்
எம்பிள்ளை என தம்பட்ட மடிக்கிறான்..
சில நேரம் வேசியாக
சில நேரம் தாசியாக
பல காலம் ஆண்டு அனுபவிக்கிறான்
பால்யம் முடிந்து மூப்பு எய்தியதும்
கருணைக் கொலை செய்து
அழல் கொடு இடுகின்றான்..
திண்ணை காலியென அவனுக்கு சந்தோஷம்..

உலகம் உடல் எனில்
அதில் நான் கல்லீரலாம்
ஒப்பாரியில் என்புகழ் பாடுகின்றான்..
நிழல் மட்டும் நாடுகிறான்
நிஜம் நானென என்றுணர்வான்?
உலகம் மானுடனுக்கு மட்டும்தானோ??
இவனுக்கு ஆறாவது அறிவாக
இறைவன் இட்டது சுயநலம் என்பது தானோ??
கேள்விக் கணைகளில் வேள்வியினை கலைத்து
மர வாழ்வென நொந்து வடக்கிருந்து
மரணித்து போகின்றேன்..!!

No comments:

Post a Comment