6 Jul 2017

வண்ணத்துப்பூச்சியின் வலசை

யவன தேசத்தின்
எவ்வனக் கிளையிலோ அவிழ்ந்த
கொன்றை மலர்க்கண்டு
கொண்டாடி யசைந்திடும்
வண்ணத்துப் பூச்சியின் தொடர்வினையோ...
என் வழியில்; என் விழியில்;
என் விதியில்; என் வீதியில்
நீ வந்து விழுந்தது?!

வண்ணத்துப் பூச்சியும்
என்னுள் உன் வருகையும்
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற
நிகழ்வுகளாகப் படவில்லை..

ஊனக்கண் புகுந்து
மனக்கண் நுண்பூகம்பம் நிகழ்த்தி
தூசிப்போல் சுற்றும் வெளிப்பட்டு
தொட்டுத்தொட்டுப் பறக்கும் பட்டாம்பூச்சிகளும்;
உன்னெழில் சாயல் பித்தேறி
உட்பிறக்கும் ஆசைகட்கும்
ஒளிமிகை வண்ணம் அப்பிய வண்ணம்
சொட்டுச்சொட்டாய் ஊறித் திளைத்திருத்தலும்;
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற
நிகழ்வுகளாகப் படவில்லை..!

கண்டுங் காணாமல் கடந்து
கானலாய் மறையும் உன்னுள்
நானும் வருவதற்காக அசையப்போகும்
அவ்வண்ணத்துப் பூச்சியினைத் தேடி
வலசை சென்றது
யவன தேசத்துப் பட்டாம்பூச்சி..!

No comments:

Post a Comment