31 May 2016

மீண்டும் மாறிடு

இதுநாள் வரையில்
பெண்ணென அறியப்பட்ட புரிதல்கள்
மாறுபட்டு; வேறாகி
எந்தன் உணர்ச்சிகள் அறிந்து மதிக்காத
கண்டுணராத குருட்டு சமுதாயத்திற்காக
முற்றிலுமாக மாறியப் பின்
ஊரோடு ஒத்து வாழக் கற்றுக்கொண்டிருப்பேன்..

வாழ்க்கையின் பொருளை
அவரவர் தேடும் படலத்தில் இருக்க
நானோ
வெளியே கொஞ்சம் சிரித்தாலும்
உள்ளே நிறைய அழுதழுது
தொலைந்த என்னை தேடிக்கொண்டிருப்பேன்..

பெண்தான் இவள் மண்ணல்ல..
பொன் எனக் கருதி எனை மாற்றி
மெருகேற்றுவதாய் எண்ணினாலும்
சூளையில் இட்டதுபோல்
வெந்து விம்மி
வெறும் கல்லாகத்தான் மாறியிருப்பேன்...

கண்ணாடி முன் நிற்கையில்
நான் அறியாத வேறொரு முகம்
தோன்றுவது கண்டு துவண்டது போல்
அகக்கண்ணாடியில் என் தனித்துவம்
இழந்து நிற்கையில்
இறந்தவள் போலாகுதல் முறையா??

பெண்ணே....
மாற்றம் ஒன்றே மாறாதது எனில்
மாற்றம் கொண்டிடு...!
வல்லமைக் கொண்டிடு...
மீண்டும் உனக்காக உன்னை மாற்றி
உன்னை மீட்டெடு..!!!

No comments:

Post a Comment