13 Jun 2018

இணை நான்

எனக்கென்னை
என்றைக்கும் பிடித்ததேயில்லை..!!

எண்ணத்தால் ஆக்கம் பெற்றோ
ஏக்கத்தால் தேக்கம் உற்றோ
என்னையறியாமல்
எனக்குள்ளே உருவாகிய
எனக்கே என்னை
பிடித்த என்னை
கனவுக் கதையில் மட்டும்
நாளும் நானும்
கண்டு கொண்டு இருக்கிறேன்..

அறிவுக்கொன்று
ஆசைக்கொன்றென
இருமனமும்
ஓரரிய அறிதுயிலில்
ஒன்றாகி ஒன்றிய தருணத்தில்
கனவின் நானே
மெய்யுலகின் நானென்பதாக
ஒரு தோற்றமாற்ற மயக்கம்!

உடலுறங்கிக் கிடக்கையில்
விழித்துக் கொள்கிறது
அறிவு மட்டும்..

பொதும்பரில் கள்ளுண்ணும் வண்டிற்கு
போது முகிழ்ந்து; கிளை அசைகையில்
போதா போதையது தெளிந்திடுமோ?
விழிப்பு நிலையிலேயே
அறிவை புறந்தள்ளும்
ஆசைக்குப் பழகிய மனது
கனவிது என்பதை ஒப்புக் கொள்ளுமோ?

மெய்யான நான் வீழ
கனவின் நானாகவே வாழ
விரும்பி அழைத்து
கனவைத் தொடர்கிறேன்..

நினைவிலும் என்னுள்
எப்போதும் ஒரு கதையுண்டு..!
முரண்பாடெனத் தெரிந்தும்
சாத்தியமில்லையென அறிந்தும்
அங்கே அவளுடன்
அவளுக்கான நானாக
வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன்..

கற்பனை என்பதனை
நான் ஒருபோதும்
ஏற்கபோவதுமில்லை..
அவளுக்கும்
என்னை என்றைக்கும்
பிடிக்கப் போவதுமில்லை..!!

No comments:

Post a Comment