25 Feb 2018

கவிதையின் தற்கொலை

மதியில் உதித்திட்ட கவிதை
மிடறில் இடறிட்டுத் தடுமாறி
உருப்பெற முடியாக் கருவாகி
அருவமாய் அலைவதை உணர்ந்ததுண்டா?

கடைசி விருந்தில்
பதின் சீடர்களின்
மனக் கலவரத்தைப் போன்று
சிந்தனை அல்லாடிக் கொண்டிருக்கையில்..

முப்பது வெள்ளிக் காசுகளாக
மூளையின் எங்கோவொரு மூலையில்
நம்பிக்கைச் சொற்கள் சிதறிக் கிடக்க..
ஜூடாசின் நிலையைப் போல்
குற்றவுணர்வுகூட கொள்ளவியலா
அறியாமையில்
எந்தன் மொழியறிவு மறத்து நிற்கையில்..

வீட்டுக் கூரையைத்
தீயின் நாக்கு
பொறியொழுகத் தீண்டுகையில்
சுவற்று சித்திரத்தில்
பிடில் வாசித்துக் கொண்டிருந்தவன்
தானே முன்வந்து
தீயில் முதலில் விழுபவனாய்
ஜீசஸ் தன் குருதியை
திராட்சை இரசத்தில் கலக்க
கத்தியை எடுக்க எத்தனித்தார்..

ஆம்,
கவிதைக்கானச் சொற்கள்
கிடைக்கப் பெறாமலிருக்கையில்
அன்றைக்கான மனம்
தற்கொலை செய்து கொள்வதைத் தவிர
வேறொன்றும் விடுதலையில்லை..

என் கவிதையினை ஏற்கனவே
முழுவதுமாய் வாசித்து விட்டவன் போல
ஜான் மட்டும் அமைதியாய் சிரித்துக் கொண்டிருந்தான்..

No comments:

Post a Comment