14 Oct 2016

பிரிவில் ஒரு தூது

பனிக்காலத்தில் திரும்புவதாய் உறுதி மொழிந்தவன்
வேனில் முதிர்ந்தும் வாராமல் சென்றதெங்கே?
என்னை விட்டு என்றைக்கும் பிரிகலேன்
என்றியம்பிய மன்னவன் மறைந்ததுமெங்கே?
உன்னைக் காணாத் துயரத்தில்
மீன்கள் இரண்டும் அழுகையில்...
நிரம்பித் ததும்பும் குளத்தில்
பரந்து பூத்துவிட்டன விழிகள்..!
பிரிவின் பரிதவிப்பில்
பரியின் குளம்பு மிதிபோல்
இடிந்து துடிக்கிறது இதயக்குழல்...
அடிக்கடி ஈர்க்குமுன் நினைவுகள்
அடிக்குது ஈர்க்கு மின்னல்போல்..!
கொற்றவை மீது நாளும் பூசிக்கிறேன்
பற்றுவன் உனையே யானும் யாசிக்கிறேன்..
கூற்றுவன் வரினும் அஞ்சலேன் - இவ்வுயிரினில்
வீற்றிருக்கும் உன்னினைவிலே துஞ்சினேன்..!
நம்பி உந்தன் காதலை
நம்பியிருக்கும் ஏழை - நின்னை
நம்பி கையினைக் கொடுத்தவள்
நம்பிக்கையினைக் களவாடி சென்றாயோ?!
கைதவம் விடுத்து மறத்தி இவளின்
கைத்தளம் பற்றிட இன்றாயினும் தோன்றாயோ?!

No comments:

Post a Comment