14 Dec 2016

காதல் காபி

காதல் காபியில் கொஞ்சம்
காமம் கலந்தது கருப்பட்டியென..
தீஞ்சுவை இதுவென உணர்த்திட
முன்வந்து கமழும் மணம்போல
பாவை அவளது பார்வை
குறிப்பில் என்னென்ன மாயை?!
குறுநகை படர்ந்து நெருங்கி வரும்
திருவாய் கோப்பையின் உதடுகள் வழியே
தீரா முத்தங்களை திகட்டாமல்
சுவைக்கலானேன்..
இச்சைகள் சிக்கிக் கொள்ளும் இச்சுக்குள்
இளஞ்சூடு பரப்பி நிறைவது அவளணங்கோ?
எம்மோகத்தை உள்ளடக்கும் தீக்கனங்கோ?!
வாழையிலை மேல்பட்ட மழைத்துளி
வழுவி நுனியில் சொட்டுவது போல
காதல் காபி அவளது - எனது
மனமெங்கும் மணந்தெளித்து
உயிரினிக்க மெல்ல கலந்தது..!
அனைத்தும் தீர்ந்த பின்னரும்
சுவை இன்னும் நீள்கிறது..!

No comments:

Post a Comment