26 Apr 2017

ஒலியின் எதிரொலி

வெளியிடும் கரிவளியும்
வெளியிடை கலக்க முடியாமல்
நெருக்கடியினில் நிறைந்திடும்
தெருக்களின் சீரான இரைச்சல்
சினங்கொண்ட வெறிநாயின் ஓலம்போல்
காதின்வழி துரத்திக்கொண்டே யிருக்கின்றது..

மயிர்கள் பிய்த்தெறிந்தாலு மடங்கா
உமிழ்வெறுப்பைக் கக்காம லமிழ்த்தி
ஒலியும் ஒளிந்துக் கொள்ளும்
தனிமையிடத்து புகல்சேரினும் ஓயவில்லை..
பகல் முடிந்து இருளடைந்து
ஒளியடங்கினும் ஒலி சாயவில்லை..

தண்ணீர் நிரப்பிய
கண்ணாடிக் குடுவையின்
அடியில் கிடப்பினும்...
ஒலி கடத்த வியலா
வளியில்லா வெற்றிடத்திலிருப்பினும்
இவ்வரிகளை வாசிக்கும்போது உள்ளே
கேட்கும் அதே குரலளவைப்போல்
எங்கிருந்தோ சத்தம் கேட்கின்றது..

பன்முக மனத்தின் எண்ணங்கள்
வன்புயலென சுழல்கையில்
ஒலியினாலான இவ்வையகத்தின்
சத்தம் என்றும் கட்டுப்படுவதாயில்லை..

எதுவுமே நினையாமல்
சும்மா இருக்கலானேன்..
அனைத்தும் அடங்கிய
மோனத்தின் நுனியில்
யாரோ ஒருவரின்
புன்முறுவல் சத்தம்
நுண்ணியமாய் கேட்டது..!

No comments:

Post a Comment