7 Oct 2017

மலரணை மஞ்சம்

கூடாய்ப் பின்னிப் பிணைந்து
கூடாய் எந்தனிமை இரவுடன்..
கூடாய் கூடலென உண்டோ மஞ்சத்தில்?!

வாராய் அருகினில் - நின்னிரு மடுமேல்
கூராய்த் துருத்தும் மருக்கள் மோதிட
கூறாய் ஒருக் கவிதை  உன் செவ்விதழோடு
வேராய் எம்மடல்வழி உள்ளூன்றும் நெஞ்சத்தில்....!

பாராய் வேலெறி விழிக்கொண்டு எய்வதுபோல்
தாராய் நுதல் துளிர்க்க அம்பெனவொரு முத்தம்..
சேறாய் வழிந்தோடும் நறும்புயல் வியர்வைவழி
சேராய் அருவுரு ஆதிக்காதலில் நித்தம்!!

வடிவுடைக் கொடியிடைக் கோடியில்
தேடி ஒடிநடை நடத்திய விரல்கள்
விழிமைத் தோய்த்து எழுதிப் பழகும்
அங்கமெங்கும் அழகியக் கிறுக்கல்கள்...!

கதிரவன் ஒளிப்புகாப் பள்ளியறையில்
கலையாதக் ‘கல்வி’க் கற்றல்  நிகழும்
கலைநயத்துடன் லகரவொற்றுப் பிழையுடன்...
ஏடேறிய ஆசைகளின் மூலமும் உரையும்
ஈடேறிக் களிந்து கழியும் இத்தருணத்தில் உறையும்..

எந்தவத்தோழி - இனி நின்
இரவுகள் துயில் கொள்ளும்
என் இதழ்களில்..
விடியல் துகில் உரிக்கும்
என் இமைகளில்...!

No comments:

Post a Comment