29 Dec 2017

நியூட்டனின் காதல் விதிகள்

எந்தன் சுயத்தினை மட்டும் பற்றிருக்கையில்
எனைவிட்டு அகலாது
அவ்விடத்தே அசையாதிருந்த போழ்திலும்;
தன்னிச்சை வுந்துதலால்
தன்னியல்பிலானதொரு நேர்க்கோட்டில்
சீராய் செல்கையிலும்
சலனமேது மில்லையடி செல்லம்மா....

நீயெனையோ நானுனையோ கடக்கையில்
அதன் தாக்கத்தின் ஈர்ப்பில் நிலைகொள்ளாது
என்வழியின் எண்திக்கும் தகர்ந்து
உன்னசைவில் இசையுமடி கண்ணம்மா...

என்னுள் நீயும் நானாய் வளர்தலிலும்
எனை நானே உன்னில் இழப்பதிலும்
எந்தன் காதலின் விசை
விகிதமாய் உன்னில் உந்துதடி உமையம்மா...

மாறாய் எனை நீங்க முற்படுகையில்
பிரிவின் பிளவிற்கு நேரெதிராய்
பிரியம்தான் கூடுதடி பொன்னம்மா..
விலகின், உனையின்னும்
சிக்கெனப் பிடிப்பேன் நானம்மா..!!

நியூட்டன் அறிந்திருப்பானா?
மூவிதிகளுக்குள் மறைந்திருக்கும்
எந்தன் காதலின் இயக்கத்தை?!?!

No comments:

Post a Comment