15 Sept 2016

காவிரி

கார்மேகப் புனல் காலும்
ஊர்ந்து உலாவி பாதம் பதிக்க,
குடக்கு திசையில் - நெடிய
அடுக்கிய மலையின்கண்
கூருச்சந்தலையில் ஆரோகணித்து;
மருகிப் புணர்ந்ததன் பயனாய்
சாகாவரங் கொணர்ந்த நீர்பிள்ளை
ஆகாயத்திற்கும் பூமிக்கும் பிறந்தது மகளாய்..!

காடு கழனி சோலைகள்
ஓடும் நிலமெல்லாம் விரித்து
மொழி பிறக்கும் முன்னே
சுழி நடையிட்டப் பெண்ணே - உன்
தீரத்தில் பிறந்ததா தமிழர் நாகரிகம்?
தீர்க்கமாய் இயம்பிட இயலாதெனினும்
கன்னித் தமிழ் மக்கள் மரபில்
கன்றாத கலையும் பண்பாடும்
மன்றம் வைத்து வளர்ந்தது
பொன்னி நின்மடியினில் தவழ்ந்து.!

நீரோடி செழித்து சோறுடைத்த நாடுமின்று
வேரொடு வீழ்ந்தது நீயின்றி சேரின்றி...
பரணிலே தூங்குதம்மா ஏர்பிடித்த கலப்பையும்
தரணியிலே அழியுதம்மா நெற்காத்த களஞ்சியமும்..!

கருவிலே உதித்ததனால் குழந்தையும்
திருவயிற்றிலேயே  நாளும் தங்குதல் சரியோ?
கிழக்கிலே பிறந்ததனால் கதிரவனும்
உழலாமல் அத்திக்கிலேயே மறைதலு முறையோ?
தன்னிலிருந்து பிறந்த மொழியாதலால்
உன்மொழி உனக்கினி உறவில்லை
என்று தமிழ் கூறினால்
என்செய்வான் இப்புல்லறிவாளன்?!

பல்லுயிரும் பகிர்ந்தோம்பும் இயற்கையை
கல்லடுக்கி தடுத்து உரிமை கொண்டால்
உயிரியல் சுழற்சியும் நடப்பதுமெங்கே?
உயர்வாழ்வும் தன் ஆதாரம் இழந்திடுமிங்கே..!

காவிரித் தாயின் முலையில் சுரந்த
தேனின் இனிய பால்அன்பை
பருகிய பாலர்களின்
வெறுப்பு நோய்க்கு
வெறுப்பே மருந்தாகா..

நீயும் நானும் ஒருவருக்கொருவர் சொந்தம்..
பாயும் காவிரியும் அனைவருக்கும் சொந்தம்..!
உண்மை உணர்ந்து விழிமின்..
புன்மை விடுத்து அன்பு செய்மின்..!

No comments:

Post a Comment